Vaanavil Poonga Week - 10
Vaanavil Poonga 🌈
1. ATM - Articles, Tales and Morals
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே…
குழந்தைகள் கடவுளின் சிறந்த படைப்பு என்று சொல்லலாம். ஒரு குழந்தையின் முகத்தில் இருக்கும் புன்னகையைப் பார்த்தாலே நம் மனதில் அமைதி மற்றும் சந்தோஷம் தோன்றுகிறது. குழந்தைகள் எப்போதும் கள்ளமற்றவர்கள். அன்பு, சிரிப்பு, விளையாட்டு என்பவையே அவர்களின் வாழ்க்கை. அதனால்தான் “குழந்தையும் தெய்வமும் ஒன்றே” என்ற பழமொழியும் உண்டு.
குழந்தைகள் நல்ல வீரிய விதைகள் போல. அவர்களை எப்படிப் விதைக்கிறோமோ, அப்படியே அவர்கள் வளர்கிறார்கள். வீட்டில் குழந்தைகள் இருப்பது வீட்டிற்கு மகிழ்ச்சி தரும். அவர்கள் சிரிப்பு, சின்னச் சின்ன பேச்சு எல்லாம் வீட்டில் மகிழ்ச்சி ஒளி பரப்பும். நம் மனதில் எவ்வளவு சோகமாக இருந்தாலும், குழந்தைகளைப் பார்த்து அவர்களுடன் நம் நேரத்தை நல்ல விதமாகக் கழிக்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது, சந்தோஷத்தில் நிரம்புகிறது.
குழந்தை வளர்ப்பு முறை
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய கலை. சரியான முறையைப் பின்பற்றும் பெற்றோர்கள் நேர்மறை பெற்றோர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
பெற்றோர்கள்தான் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரி. பிள்ளைகள் நல்ல நடத்தையை வளர்த்துக்கொள்ளவும், நேர்மறையான பழக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் பெற்றோர்கள் உதவ வேண்டும்.
பெற்றோர் தம் குழந்தையுடன் நேர்மறையான உறவைக் கொண்டிருக்கும் போது மட்டுமே இவை எல்லாம் சாத்தியமாகும். குழந்தைகளை நேர்மறையாக வளர்க்க பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சிறு சிறு குறிப்புகளை இங்கு நாம் பார்க்கலாம்.
குழந்தைகள் வளர்ப்பு முறைகள் மூன்று
பொதுவாக, மூன்று முக்கிய குழந்தை வளர்ப்பு முறைகள் குறிப்பிடப்படுகின்றன:
• சர்வாதிகார வளர்ப்பு (Authoritarian upbringing)
• அதிகாரப்பூர்வ வளர்ப்பு (Formal upbringing)
• தாராளமய வளர்ப்பு (Permissive upbringing)
1. சர்வாதிகார வளர்ப்பு
(Authoritarian upbringing)
இந்த முறையில், பெற்றோர்கள் அதிக கட்டுப்பாட்டையும் குறைந்த ஆதரவையும் வெளிப்படுத்துகிறார்கள்.
அவர்கள் கடுமையான விதிகளை விதிக்கும் போதும், தங்கள் பிள்ளைகள் தங்களைக் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மீறினால் தண்டனைகள் கடுமையாக இருக்கும்.
இந்த வளர்ப்பு முறையில் வளரும் குழந்தைகள் கீழ்ப்படிதலுடன் இருக்கலாம்; ஆனால் அவர்கள் குறைந்த தன்னம்பிக்கை, சமூகத் திறன்கள் குறைபாடு மற்றும் அதிக கவலை கொண்டவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், சொந்தமாக முடிவெடுக்கவும் அவர்கள் தயங்கலாம்.
முக்கிய அம்சங்கள்
1. கட்டுப்பாடு மிக அதிகம்
பெற்றோர் எதைச் சொல்கிறார்களோ, அதைச் செய்ய வேண்டியது குழந்தையின் கடமை என்று நினைப்பார்கள்.
“நான் சொன்னா சொன்னதுதான்!”
என்பதே அவர்களின் அடிப்படை விதி.
2. விதிகள் விளக்கம் இல்லாமல்
விதிகளை உருவாக்குவார்கள், ஆனால் ஏன் அந்த விதி தேவை என்று குழந்தைக்கு விளக்க மாட்டார்கள்.
3. தண்டனை முக்கியம்
தவறு செய்தால் தண்டனை அல்லது கோபம் காட்டி சரி செய்வார்கள். வழிகாட்டுவதற்கு பதிலாக பயம் உருவாக்குவார்கள்.
4. அன்பு வெளிப்பாடு குறைவு
பெற்றோர் குழந்தையை நேசிப்பார்கள், ஆனால் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். குழந்தை பெற்றோரிடம் பயப்படுவார்கள்.
5. எதிர்பார்ப்பு அதிகம்
குழந்தை எல்லா விஷயத்திலும் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள்
• பயம் மற்றும் மனஅழுத்தம் அதிகரிக்கும்.
• தன்னம்பிக்கை குறைவு ஏற்படும்.
• தனிச்சையாக முடிவு எடுக்க முடியாது.
சிலர் மிக ஒழுக்கமானவர்களாக வளரலாம், ஆனால் மனதளவில் சுதந்திரம் இல்லாமல் இருப்பார்கள்.
சில சமயம், குழந்தைகள் பெற்றோரின் தண்டனையிலிருந்து தப்பிக்க பொய் பேசும் பழக்கம் ஏற்படலாம்.
எடுத்துக்காட்டு
குழந்தை பாடத்தில் குறைவாக மதிப்பெண் எடுக்கும்போது, பெற்றோர்:
“தேர்வில் ஏன் மார்க் குறைஞ்சு? இனிமேல் விளையாடப் போகக் கூடாது!”
என்று கோபப்படுவார்கள்.
ஆனால் “மதிப்பெண் எப்படி குறைந்தது?” என்று கேட்டு புரிந்துகொள்ள மாட்டார்கள்.
சர்வாதிகார பெற்றோர்களின் அணுகுமுறை
| அம்சம் | விளக்கம் |
|---|---|
| ஒழுக்கம் | மிகக் கடுமையாக இருக்கும் |
| விதிகள் | பெற்றோர் தீர்மானிப்பார்; குழந்தை கேள்வி கேட்க முடியாது |
| தண்டனை | தவறுக்கு உடனேயே தண்டனை வழங்குவார்கள் |
| விளக்கம் | ஏன் என்ற கேள்விக்கு விடை தரமாட்டார்கள் |
| அன்பு | மன அன்பு காட்டுவது குறைவாக இருக்கும் |
2. அதிகாரப்பூர்வ வளர்ப்பு
(Formal upbringing)
இது ஒரு மிதமான அணுகுமுறை.
பெற்றோர்கள் உறுதியான விதிகளை விதிப்பதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் தேவைகளையும் உணர்வுகளையும் மதிக்கிறார்கள்.
அவர்கள் நியாயமான காரணங்களுக்காக விதிகளை விளக்குகிறார்கள் மற்றும் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள்.
இந்த வளர்ப்பு முறையில் வளரும் குழந்தைகள் அதிக தன்னம்பிக்கை, சிறந்த சமூகத் திறன்கள் மற்றும் நல்ல உணர்ச்சிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
அவர்கள் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் செயல்படக் கற்றுக்கொள்கிறார்கள்.
பெற்றோரின் அன்பும் வழிகாட்டுதலும் அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை அளிக்கிறது.
பெற்றோரின் நம்பிக்கை
குழந்தை அன்பாலும் விளக்கத்தாலும் கற்றுக்கொள்ள முடியும் என நம்புவார்கள்.
ஒழுக்கம் இருக்க வேண்டும், ஆனால் அது பயம் மூலம் அல்ல, புரிதல் மூலம் வர வேண்டும்.
குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும் என்பது இவர்களின் நோக்கம்.
பெற்றோரின் பொதுவான சொற்கள்
“நீ செய்தது நல்லதுதான், ஆனால் அடுத்த முறை இன்னும் கவனமாக இருக்கலாம்.”
“இந்த விதி ஏன் முக்கியம் என்று சொல்கிறேன்…”
“நான் உன்னைப் புரிந்துகொள்கிறேன், ஆனால் இதைச் செய்யணும்.”
என்று கூறுவார்கள்.
குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள்
• நல்ல பழக்கவழக்கங்கள்
• தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் சுயக்கட்டுப்பாடு
• குழந்தை தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வார்.
• மற்றவர்களை மதிக்கும் பண்பு உருவாகும்.
• சமூகத்தில் நல்ல உறவுகள் உருவாகும்.
சில நேரங்களில்:
பெற்றோர் அளிக்கும் சுதந்திரத்தை சில குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தலாம் — ஆனால் பெரும்பாலும் அவர்கள் நன்றாகக் கற்றுக்கொள்வார்கள்.
எடுத்துக்காட்டு
குழந்தை மார்க் குறைவாக எடுக்கும்போது, பெற்றோர்:
“நீ முயற்சி செய்தது எனக்குத் தெரியும். பரவாயில்லை, அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்யலாம். அடுத்த தேர்வில் இன்னும் சிறப்பாகச் செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கலாமா?”
என்று கூறுவார்கள்.
அதிகாரப்பூர்வ பெற்றோர்களின் அணுகுமுறை
| அம்சம் | விளக்கம் |
|---|---|
| அன்பு | குழந்தையின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வார்கள் |
| விதிகள் | நியாயமான விதிகள் வைப்பார்கள் |
| விளக்கம் | ஒவ்வொரு விதிக்கும் காரணம் கூறுவார்கள் |
| ஒழுக்கம் | தண்டனைக்கு பதிலாக வழிகாட்டல் தருவார்கள் |
| சுதந்திரம் | குழந்தைக்கு முடிவு எடுக்க சில சுதந்திரம் கொடுப்பார்கள் |
| தொடர்பு | இருவருக்கும் இடையில் நல்ல உரையாடல் இருக்கும் |
3. தாராளமய வளர்ப்பு
(Permissive upbringing)
இந்த முறையில், பெற்றோர்கள் அதிக ஆதரவையும் குறைந்த கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறார்கள்.
அவர்கள் தங்கள் குழந்தைகளின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மற்றும் சில நேரங்களில் விதிகளை மீறவும் அனுமதிக்கிறார்கள்.
தண்டனைகள் அரிதாகவே இருக்கும்.
இந்த வளர்ப்பு முறையில் வளரும் குழந்தைகள் அதிக சுதந்திரமாகவும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருக்கலாம்.
ஆனால் அவர்கள் குறைந்த சுயக்கட்டுப்பாடு, பொறுப்பற்ற நடத்தை மற்றும் சமூக எல்லைகளைப் புரிந்துகொள்வதில் சிரமம் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
அவர்கள் உடனடியாகத் தங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொரு வளர்ப்பு முறையும் அதன் சொந்த விளைவுகளைக் கொண்டிருந்தாலும், எந்த ஒரு முறையும் எல்லா குழந்தைகளுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் என்று கூற முடியாது.
ஒவ்வொரு குடும்பத்தின் விழுமியங்களும் ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைகளும் வேறுபட்டவை.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தின் மதிப்புகள் மற்றும் குழந்தையின் இயல்புக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப ஒரு வளர்ப்பு முறையைத் தேர்ந்தெடுத்து அதைச் செயல்படுத்துவது முக்கியம்.
பெற்றோரின் நம்பிக்கை
குழந்தை சுயமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
“தண்டனை குழந்தையின் மனதை காயப்படுத்தும்” என்று நம்புவார்கள்.
குழந்தை எப்படி மகிழ்ச்சியாக இருப்பாரோ, அதுவே முக்கியம் எனக் கருதுவார்கள்.
இந்த வகை பெற்றோரின் பொதுவான சொற்கள்
“சரி பாப்பா, நீ விரும்பினதைச் செய்.”
“அது பெரிய விஷயம் இல்லை.”
“எனக்கு கோபம் வராது, நீ உன் மனசு போல இரு.”
குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள்
குழந்தை தன்னிச்சையாக நடக்கக் கற்றுக்கொள்வார்.
படைப்பாற்றல் மற்றும் சுதந்திரமான சிந்தனை அதிகரிக்கும்.
பெற்றோருடன் நெருக்கமான உறவு இருக்கும்.
குழந்தைக்கு ஏற்படும் மற்ற விளைவுகள்
• ஒழுக்கம், பொறுப்புணர்வு குறைவாக இருக்கலாம்.
• தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
• சில சமயம் தவறான பழக்கங்கள் உருவாகலாம்.
• “இல்லை” என்று சொன்னால் எளிதில் கோபம் அடையலாம்.
எடுத்துக்காட்டு
குழந்தை இரவில் 10 மணிக்குப் பிறகும் டிவி பார்க்க விரும்பினால், பெற்றோர்:
“சரி கொஞ்ச நேரம் பாரு, நாளைக்கு பள்ளி இருக்கு”
என்று சொல்ல மாட்டார்கள் — மாறாக,
“நீ விரும்பினதைப் பண்ணு”
என்பார்கள்.
இங்கு அன்பு அதிகம், ஆனால் ஒழுக்கம் குறைவு.
தாராளமய பெற்றோர்களின் அணுகுமுறை
| அம்சம் | விளக்கம் |
|---|---|
| அன்பு | மிக அதிகம் |
| விதிகள் | மிகக்குறைவு அல்லது இல்லை |
| தண்டனை | அரிதாகவே கொடுக்கப்படும் |
| ஒழுக்கம் | தளர்வாக இருக்கும் |
| சுதந்திரம் | மிக அதிகம் |
| தொடர்பு | குழந்தையுடன் நண்பர் போல் நடப்பார்கள் |
மூன்று விதமான பெற்றோர்கள் – ஒரு சிறுகதை
இங்கே மூன்று விதமான பெற்றோர்களின் குணநலன்களை ஒரு சிறு கதையின் மூலம் காணலாம்.
ஒரு சிறிய ஊரில், மூன்று குடும்பங்கள் வாழ்ந்தனர்.
அவர்களுக்கு எட்டு வயதில் மணி, லலிதா மற்றும் அஜய் என்ற பிள்ளைகள் இருந்தனர்.
இவர்கள் மூவரும் ஒரே பள்ளியில் ஒன்றாக, ஒரே வகுப்பில் பயின்று வருகிறார்கள். இவர்கள் மூவரும் நல்ல நண்பர்கள்.
ஆனால், அவர்களின் பெற்றோர்கள் மூவரும் மூன்று விதமான குணங்களைக் கொண்டவர்கள்.
மணியின் பெற்றோர்கள் மிகவும் கண்டிப்புடன் (சர்வாதிகார முறை) (Authoritarian upbringing) இருப்பவர்கள்.
அவர்கள் தினமும் மணிக்கு நேரம் காட்டி,
“இப்போது படிக்கணும்!”
“இப்போது சாப்பிடணும்!”
“இப்போது தூங்கணும்!”
என்று சொல்லி, எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.
மணி நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், சில நேரங்களில் “எனக்கு ஓய்வு வேண்டும்!” என்று மனதில் நினைத்தான்.
லலிதாவின் பெற்றோர்கள் மிகவும் மனம் திறந்தவர்கள். (தாராளமய பெற்றோர்) (Permissive upbringing)
அவர் சொல்வார்,
“லலிதா, உனக்கு பிடித்ததைச் செய்!”
“விளையாடு, டிவி பார்,”
என்று கூறுவார்கள்.
அதனால் லலிதா சுதந்திரமாக இருந்தாள், ஆனால் சில நேரங்களில் படிக்க மறந்து விடுவாள்.
அஜயின் அப்பா, அம்மா இருவரும் மிதமான பெற்றோர். (அதிகாரப்பூர்வ பெற்றோர்கள்) (Formal upbringing)
அவர்கள் அஜயிடம் சொல்வார்கள்:
“முதலில் சிறிது படி, பிறகு விளையாடு.”
“நேரம் பார்த்து வேலை செய்.”
அஜய் படித்தும், விளையாடியும், மகிழ்ச்சியாக இருந்தான்.
ஒரு நாள் மூவரும் சுற்றுலாவிற்குச் சென்றனர்.
அங்கு அவர்கள் மூவரும் தங்களின் பெற்றோருடன் பூங்காவிற்குச் சென்றனர்.
மணியின் அம்மா கூறினார்:
“இங்கே ஓடக்கூடாது!”
“அங்கே குதிக்கக்கூடாது!”
மணிக்கு பூங்காவைப் பார்த்ததும் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் விளையாட முடியவில்லை.
லலிதாவின் அப்பா சொன்னார்:
“நீ விரும்பியதைச் செய்!”
லலிதா ஓடி விளையாடி, தவறி விழுந்தாள்.
அஜயின் பெற்றோர் சொன்னார்கள்:
“அங்கே ஓடலாம், ஆனால் அந்த மூலையை விட்டு போகாதே.”
“சந்தோஷமாக ஆடிப்பாடி விளையாடு, அதே சமயம் கவனமாகவும் இரு.”
அதனால் அஜய் மகிழ்ச்சியாக விளையாடி மகிழ்ந்தான்.
சுற்றுலா முடிந்தபின் மூவரும் பேசிக்கொண்டனர்.
அஜய் சொன்னான்:
“நான் விளையாடவும் செய்தேன், அது போல என் பெற்றோர் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாகவும் இருந்தேன். அதனால் நான் இந்த சுற்றுலாவில் சந்தோஷமாக இருந்தேன்.”
அதற்கு மணி:
“எனக்கும் உன்னை மாதிரி விளையாடணும்னு ஆசையாக இருந்தது. ஆனால் என்னால் விளையாட முடியவில்லை. ஏன்னா என்னோட பெற்றோர்கள் ரொம்ப கண்டிப்பானவர்கள்” என்று கூறினான்.
ஆனால் லலிதாவோ:
“எங்க வீட்டுல கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது. ஆனா, அதிக சுதந்திரத்தால் ஓடியாடி விளையாடும் போது நானே கீழே விழுந்து அடிபட்டுக்கிட்டேன். அதனால் என்னால் இந்த சுற்றுலாவைக் கொண்டாட முடியவில்லை” என்று கூறினாள்.
“அதிக கட்டுப்பாடு இருந்தாலும் சரி, மிக அதிக சுதந்திரம் இருந்தாலும் சரி, சிரமம் தான்!
சமநிலை தான் சிறந்த வழி!”
என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்வது
ஒரு சிறிய விதை மண்ணில் விழுந்து, மெல் முதிர்ந்து, ஒளியில், மழையின் துளிகளில் அது வளர ஆரம்பித்து, நல்ல சுற்றுப்புறச் சூழ்நிலையின் பராமரிப்பில் வளர்ந்து, இலைகளை விரித்து, கிளைகளை நீட்டி, பரந்த மரமாக மாறுகிறது.
அதன் நிழலில் பல உயிர்கள் தஞ்சம் அடைகின்றன. பறவைகள் கூடு கட்டுகின்றன.
ஒரு சிறிய விதை இப்படி பெரிய மரமாக மாறுவது எவ்வளவு அதிசயமானது.
அதேபோல நம் குழந்தைகளுக்கும் நல்ல சிந்தனைகள், நல்ல பழக்கவழக்கங்கள் ஒரு சிறிய விதையாகும்.
நாம் தினமும் நம் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்து வளர்த்தால் அது அவர்களின் வாழ்க்கையை அழகான, மகிழ்ச்சியான மரமாக மாற்றும்.
நன்றி, அன்பு, பொறுமை போன்ற பண்புகள் அவர்களின் இதயத்தில் வேரூன்றி வளரும் போது, அவர்களின் உலகமும், அவர்களைச் சுற்றி இயங்கும் உலகமும் அழகாக இருக்கும்.
“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினிலே…..”
என்ற நடைமொழிக்கு ஏற்ப, நம் குழந்தைகள் வாழ்வில் நற்பண்புகளையும், நல்லொழுக்கங்களையும் மற்றும் சமூகத்தின் மதிப்புகளையும் கற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் சிறு சிறு சவால்களையும், சூழல்களையும் எதிர்கொண்டு, அவர்கள் வெற்றி பெற பெற்றோர்களின் வளர்ப்பு முறையும் இன்றியமையாதது என்றால் மிகையாகாது.
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!
– ரேகா ரவிக்குமார்
E-Smart
மூன்று விதமான பெற்றோர் – வினாடி வினா
1. இந்தக் கதையில் மூன்று குழந்தைகளின் பெயர்கள் யாவை?
a) மணி, லலிதா, அஜய்
b) ராஜு, சுனிதா, குமார்
2. மணியின் அம்மா எந்த வகை பெற்றோர்?
a) அதிகாரப்பூர்வ
b) சர்வாதிகார
3. லலிதாவின் அப்பா எந்த வகை பெற்றோர்?
a) தாராளமய
b) சர்வாதிகார
4. அஜயின் பெற்றோர் எந்த வகை பெற்றோர்?
a) தாராளமய
b) அதிகாரப்பூர்வ
5. மணியின் அம்மா தினமும் என்ன செய்வார்?
a) எல்லாவற்றையும் நேரம் பார்த்துச் சொல்வார்.
b) லலிதாவை விளையாட அனுப்புவார்.
6. மணியின் அம்மா கூறும் வாக்கியம் எது?
a) “இப்போது சாப்பிடணும்!”
b) “நீ விரும்பியதைச் செய்!”
7. மணிக்கு எப்போது மனதில் ஓய்வு வேண்டுமெனத் தோன்றியது?
a) படிக்கும்போது
b) விளையாடும்போது
8. லலிதாவின் அப்பா சொல்லும் வாக்கியம் எது?
a) “லலிதா, உனக்கு பிடித்ததைச் செய்!”
b) “இப்போது படிக்கணும்!”
9. லலிதா ஏன் சில நேரங்களில் பாடம் படிக்க மறந்து விடுகிறாள்?
a) அதிக சுதந்திரம் இருந்ததால்
b) உடல் நலம் சரியில்லாததால்
10. அஜயின் பெற்றோர் எந்த வகையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள்?
a) மிதநிலை
b) கட்டுப்பாடு மட்டும்
நான் எந்த வகையான பெற்றோர்?
நீங்கள் எந்த வகையான பெற்றோர் என்பதை மதிப்பிடுவதற்கு உதவும் ஒரு கேள்விப்பட்டியல் இதோ!
ஒவ்வொன்றையும் படித்து, உங்களுக்குப் பொருந்துமானால் “ஆம்”, பொருந்தாவிட்டால் “இல்லை” என்று குறியிடவும்.
“நான் எந்த வகையான பெற்றோர்?” – மதிப்பீட்டு முடிவு
| மதிப்பெண் (மொத்தம் /10) | பெற்றோர் வகை | விளக்கம் |
|---|---|---|
| 1 முதல் 3 வரை | சர்வாதிகார பெற்றோர் | மேலும் முயற்சி தேவை (மாற்றம் அவசியம்) |
| 4 முதல் 6 வரை | தாராளமய பெற்றோர் | நடுத்தர நிலை (சில சமயம் மாற்றம் தேவை) |
| 7 முதல் 10 வரை | அதிகாரப்பூர்வ பெற்றோர் | சிறந்த பெற்றோர் (நல்ல வழியில் இருக்கிறீர்கள்!) |
சரியான விடைகள்
கேள்வி – 1 – ஆம்
கேள்வி – 2 – ஆம்
கேள்வி – 3 – இல்லை
கேள்வி – 4 – ஆம்
கேள்வி – 5 – ஆம்
கேள்வி – 6 – இல்லை
கேள்வி – 7 – ஆம்
கேள்வி – 8 – இல்லை
கேள்வி – 9 – ஆம்
கேள்வி – 10 – இல்லை
2. AM - Art Makers
3. PIN - Picture it Now
4. DIY - Do it Yourself
5. QR - Questions and Responses
📚
குழந்தைகளிடம் கோபப்படாமல் எப்படி பொறுமையாகப் பேசுவது?
6. WWW - Weekly Wisdom Waves
Comment your Answers Below ......

.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)





Comments
Post a Comment